ஊட்டிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கொரோனா பாதிப்புக்கு பின்னர் ஊட்டிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது.
ஊட்டி
கொரோனா பாதிப்புக்கு பின்னர் ஊட்டிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. பழமையான அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனில் நடைபெறும் மலர் கண்காட்சி பிரபலமானது.
ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண காலநிலை இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவுவதை போல் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் இங்கு வந்து இயற்கையின் அழகை ரசித்துவிட்டு செல்கிறார்கள்.
தனி பதிவேடு
தாவரவியல் பூங்காவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து தனி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஊட்டி கலெக்டர் அலுவலகம், புனித ஸ்டீபன் ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம், புனித தாமஸ் ஆலயம் உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்களையும் பார்க்க தவறுவது இல்லை.
அதுபோன்று முன்னோர்களது கல்லறையை பார்வையிட்டு அஞ்சலியும் செலுத்துவது உண்டு. அத்துடன் அவர்கள் தாவரவியல் பூங்காவில் பழமை யான கட்டிடம் மற்றும் வெளிநாட்டு மரங்களை பார்வையிடுவதுடன் ஊட்டியில் விளையும் காய்கறிகள், பழங்களையும் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.
வருகை குறைந்தது
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் நின்றது. சில நாடுகளில் பரவலை தடுக்க விமான போக்குவரத்து தடை போன்ற கட்டுப்பாடுகளால் நீலகிரியில் ஊரடங்கு தளர்வு அளித்தும் வெளிநாட்டினர் வரவில்லை.
தற்போது கொரோனா பரவல் குறைந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணி கள் வருகை இல்லாமல் உள்ளது. மேலும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக விமான போக்குவரத்து எந்த நேரத்திலும் தடைபடும் அபாயம் இருப்பதாக வெளிநாட்டினர் ஊட்டிக்கு வருவதை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டில் 22 பேர்
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும் போது, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு 3,468 பேர், 2020-ம் ஆண்டு 2,155 பேர் என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். 2021-ம் ஆண்டு வெளிநாட்டினர் யாரும் வரவில்லை.
நடப்பாண்டில் இதுவரை 22 பேர் மட்டுமே வந்து உள்ளனர். கொரோனா பாதிப்பால் வெளிநாட்டினர் வருகை மிகவும் குறைந்து உள்ளது என்றார்.
Related Tags :
Next Story