தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் பூச்சிக்கொல்லி மருந்து சிக்கியது: 3 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ10 லட்சம் மதிப்பிலான பூச்சிக்கொல்லி மருந்து கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கியது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பூச்சிக்கொல்லி மருந்து கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கண்காணிப்பு
தூத்துக்குடியில் இருந்து விவசாயத்துக்கு உபயோகப்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து இலங்கைக்கு கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தேவேந்திரர் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரூ.10 லட்சம் பூச்சிக்கொல்லி மருந்து
அப்போது, கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் பதிவு செய்யப்படாத ஒரு நாட்டுப்படகு கடலில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த படகை போலீசார் சோதனை செய்தனர். அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக பூச்சிக்கொல்லி மருந்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதாவது 25 லிட்டர் அளவு கொண்ட 20 கேன்கள் மற்றும் 444 அட்டை பெட்டிகளில் 944 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருந்தன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த வசந்த் (வயது 23), குமார் (22), ஜெயக்குமார் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளையும், படகையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story