ஊட்டியில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி


ஊட்டியில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 15 March 2022 9:07 PM IST (Updated: 15 March 2022 9:07 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊட்டி

ஊட்டியில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இளைஞர்களுக்கு பயிற்சி 

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் வனத்தீ மேலாண்மை பயிற்சி நீலகிரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 

1½ மாத பயிற்சி காலத்தில் பல்லுயிர்ப் பெருக்கம், காடுகளின் தன்மை, பல்வேறு நாடுகளில் ஏற்படும் காட்டுத் தீயின் தன்மை, இந்தியாவில் காட்டுத் தீயின் தன்மை, அதைக் கட்டுப்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

அதன் ஒரு பகுதியாக பயிற்சியாளர்களுக்கு காட்டுத்தீ ஏற்பட்டால் அணைப்பது குறித்த செயல்விளக்கம் ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் அளிக்கப்பட்டது.

எதிர்த்திசையில் நிற்கக்கூடாது

இதில் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரேமானந்தன் பேசும்போது, காட்டுத்தீ ஏற்பட்டால் காற்று வீசும் எதிர்த்திசையில் நின்று அணைத்தால் நம் மீது தீ பரவி விடும். அவ்வாறு செய்யக்கூடாது. 

மாறாக காற்று வீசும் திசைக்கு நேராக நின்று தீயை அணைக்க வேண்டும். மண்வெட்டி மூலம் மண்ணை எரியும் தீ மீது போட்டு அணைக்கலாம். அல்லது செடிகளை கொண்டு தீயை அழுத்தி அணைக்க முடியும் என்றார்.

மேலும் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது, தீயை அணைக்கும் போது உயிர், உடைமைகளை பாதுகாப்பது, பாதுகாப்பாக மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

முன்னுரிமை

இதுகுறித்து சுற்றுச்சூழல் கல்வி மைய அதிகாரி குமாரவேலு கூறும்போது, நீலகிரியை சேர்ந்த 24 இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் அவர்கள் வனத்துறை பணியில் சேர முன்னுரிமை கிடைக்கும் என்றார். நிலைய அலுவலர் ஸ்ரீதர், தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.


Next Story