நீலகிரியில் பழுதான குடிநீர் ஏடிஎம் எந்திரங்களை ஒரு வாரத்துக்குள் சீரமைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


நீலகிரியில் பழுதான குடிநீர் ஏடிஎம் எந்திரங்களை ஒரு வாரத்துக்குள் சீரமைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2022 9:30 PM IST (Updated: 15 March 2022 9:30 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் பழுதான அனைத்து குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை ஒரு வாரத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்று உள்ளாட்சி துறை அதிகாரி களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஊட்டி

நீலகிரியில் பழுதான அனைத்து குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை ஒரு வாரத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்று உள்ளாட்சி துறை அதிகாரி களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம் 

நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டதால், மாற்று ஏற்பாடாக சுற்றுலா தலங்கள், நெடுஞ்சாலைகள் முக்கிய பகுதிகளில் 70 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பொருத்தப்பட்டது.

 கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்தது. இந்தநிலையில் நீலகிரியில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

 கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  

ஒருவாரத்துக்குள் சீரமைக்க வேண்டும்

சுற்றுலா தலமான நீலகிரியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

மேலும் பழுதடைந்து உள்ள அனைத்து குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை ஒரு வாரத்துக்குள் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு எந்திரத்துக்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும். 

அவர் சம்பந்தப்பட்ட எந்திரத்தின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சித் துறை அலுவலர்கள் குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்துக்கு தேவையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் எந்திரத்துக்கு மின்சாரம் கிடைப்பதை நேரில் பார்வையிட வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் எந்திரங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என்று பொறுப்பு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வெளிமாநில, பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை சாவடியில் சோதனை செய்து, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும். நீலகிரிக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story