திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.35 லட்சத்தை செலுத்தாதது கண்டுபிடிப்பு


திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.35 லட்சத்தை செலுத்தாதது கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 15 March 2022 9:35 PM IST (Updated: 15 March 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் என 650-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 150 பேர் வருமானவரி செலுத்தும் பணியாளர்கள் ஆவர். இந்த பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் ஆண்டுதோறும் மாநகராட்சி சார்பில் வருமானவரி பிடித்தம் செய்யப்படுகிறது.
பின்னர் அந்த தொகை வருமானவரித்துறையில் செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வருமானவரி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இன்று மதியம் 2 மணிக்கு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு மதுரை வருமானவரி அதிகாரிகள் 4 பேர் வந்தனர்.

வருமானவரி அதிகாரிகள் சோதனை

மேலும் மாநகராட்சி பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களிடம் வருமானவரி பிடித்தம் செய்தது தொடர்பான கணக்குகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை மதியம் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. அதில் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களிடம் வருமானவரிக்காக பிடித்தம் செய்த ரூ.35 லட்சத்தை செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம், வருமானவரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது நிதி பற்றாக்குறையால் வருமானவரி செலுத்த தாமதம் ஆனதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களிடம் பிடித்தம் செய்த வருமானவரியை விரைவில் செலுத்தும்படி வருமானவரி அதிகாரிகள் அறிவுறுத்தி விட்டு சென்றனர். 
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story