அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்


அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 10:43 PM IST (Updated: 15 March 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஊராட்சி மன்ற தலைவர்களின் நிர்வாகத்தில் தலையிடும் தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று அ.தி.மு.க.வினர், தரங்கம்பாடி சாலையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். இந்த போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கோஷங்கள் எழுப்பினர்
கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த அவர்கள், கலெக்டர் அலுவலகத்தின் முன்பு போடப்பட்டிருந்த தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினர். ஆனால் போலீசார் தடுப்புகளை அப்புறப்படுத்த மறுத்து விட்டனர்.  இதனால் அங்கிருந்தபடியே அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கோஷங்கள் எழுப்பினர்.
மனு அளித்தனர்
இதனைத்தொடர்ந்து அங்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் பேசினர். 3 மணி நேரம் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. பின்னர் பவுன்ராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 
இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தமிழன், ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ்குமார், ஏ.கே.சந்திரசேகரன், ஜனார்த்தனன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story