கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 11:04 PM IST (Updated: 15 March 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

மீனவர்கள் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டி, 
இலங்கை கடற்படையை கண்டித்து தொண்டியில் மீனவர்கள் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் தொண்டி சுற்று வட்டார நாட்டுப்படகு மீனவ கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டி சிந்தாத்திரை மாதாஆலயம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். மீனவ கிராம தலைவர்கள் தொண்டிராஜ், காளிதாஸ், மாணிக்கம், சீனிராஜன், கண்ணன், முத்துமாணிக்கம் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடிகளை கையில் ஏந்தியவாறு கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நம்புதாளை, தொண்டியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட படகு மற்றும் நாட்டு வள்ளங்களில் கருப்பு கொடி ஏற்றினர். 
வேலை நிறுத்தம் 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 18.2.2022 அன்று  மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் நம்புதாளை நாட்டு படகு மீனவர்கள் 6 பேரையும், இலங்கையில் உள்ள 20 நாட்டு படகு, வள்ளங்களையும் உடனடியாக மீட்டு தரவேண்டும். பாக்ஜலசந்தி கடல்பகுதியில் நடைமுறையில் உள்ள மீன் பிடி தொழில் ஒழுங்கு முறைகளை சீர்குலைக்கும் நாகை, காரைக்கால் விசைப்படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும். அரசின் சட்ட விதிமுறைகளை மீறி கரையோர மீன்பிடிப்பிலும், இரட்டை மடி மீன் பிடிப்பிலும் ஈடுபடும் விசைப்படகுகளின் மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அந்தோணி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, கடல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கணேசன், மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர் நம்புதாளை முத்துராக்கு, ஊராட்சி தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி தலைவர் புதுப்பட்டினம் உதய சந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் சந்தனம், இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமேசுவரம் ஜாய்சி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் நம்புதாளை மீனவ கிராம தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார். 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டி சுற்று வட்டாரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி தொண்டி கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story