அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மந்திரி நவாப் மாலிக்கை விடுவிக்க ஐகோர்ட்டு மறுப்பு


படம்
x
படம்
தினத்தந்தி 15 March 2022 11:12 PM IST (Updated: 15 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மந்திரி நவாப் மாலிக்கை விடுவிக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

மும்பை, 
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மந்திரி நவாப் மாலிக்கை விடுவிக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
நவாப் மாலிக் மனு
மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக்கை கடந்த மாதம் 23-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிக்கு நெருக்கமானவர்களுக்கு குர்லா பகுதியில் இருந்த சொத்துகளை நவாப் மாலிக் குறைந்த விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கொடுக்கல், வாங்கலில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாப் மாலிக் மும்பை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை அவரை கைது செய்தது, ஜெயிலில் அடைத்தது சட்டவிரோதம் என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
விடுவிக்க மறுப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.பி.வாரலே, எஸ்.எம். மோதக் அடங்கிய அமர்வு, "நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை காவலில் அடைக்க கூடாது என அவர் தரப்பு வக்கீல் சிறப்பு கோர்ட்டில் கடுமையாக வாதாடி உள்ளார். எனினும் சரியான சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு கோர்ட்டு அவரை அமலாக்கத்துறை, நீதிமன்ற காவலில் அடைத்து உள்ளது" என கூறியது.
மேலும் நீதிபதிகள், நவாப் மாலிக் சட்டத்தின்படி தான் கைது செய்யப்பட்டுள்ளார், தொடர்ந்து அவர் அமலாக்கத்துறை காவலிலும், நீதிமன்ற காவலிலும் அடைக்கப்பட்டுள்ளார் என கூறினர். எனவே ஜெயிலில் இருந்து நவாப் மாலிக்கை விடுவிக்க இடைக்கால உத்தரவை பிறப்பிக்க எந்த காரணமும் இல்லை என கூறிய நீதிபதிகள், நவாப் மாலிக் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் விண்ணப்பிக்கலாம் என கூறினர்.
நீதி வெல்லும்
நவாப் மாலிக்கை விடுவிக்க ஐகோர்ட்டு மறுத்ததை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அவரது அலுவலகம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
 நீதிதுறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உண்மையும், நீதியும் வெற்றி பெறும். சில தடைகள் உள்ளது உண்மைதான். ஆனால் தைரியம் இன்னும் உயிரோடு இருக்கிறது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story