குடியாத்தம் அருகே பள்ளி மாணவனுக்கு பிளேடு வெட்டு, சக மாணவன் வெறிச்செயல்
குடியாத்தம் அருகே பள்ளி மாணவனை சக மாணவன் பிளேடால் வெட்டினான்.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பூசாரி வலசை கிராமம் வடக்குப்பட்டியை சேர்ந்த 14 வயது மாணவன் அதே கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவனுக்கும், அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அறிவுரை கூறி அனுப்பி உள்ளனர். இந் நிலையில் மாணவன் யுவராஜ் நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளான். பள்ளி அருகே வந்தபோது ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட மாணவன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால், அந்த மாணவனின் மார்பு வலது கை மற்றும் முதுகுப் பகுதியில் சரமாரியாக வெட்டி உள்ளான். இதில் பலத்த காயம் அடைந்து பள்ளி சீருடை முழுவதும் ரத்தமானது.
உடனடியாக மாணவனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிசாமி பூசாரிவலசை பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளார். குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் உள்ளிட்டோர் சென்று இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் எனவும், மாணவர்களின் பிரச்சினை தொடரக் கூடாது எனவும் இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தனர். சம்பவம் குறித்து பரதராமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story