மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 March 2022 11:24 PM IST (Updated: 15 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம்- சென்னை சாலையில் புதியதாக நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் மோகன், அங்கிருந்த அதிகாரிகளிடம் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து சாலையோரங்களில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டுவது, ஆக்கிரமிப்பு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நகராட்சியில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.263 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் வழுதரெட்டி பாண்டியன் நகர் பகுதியில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அங்கன்வாடி மைய கட்டிட பணி

 இதையடுத்து விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மோகன், அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து கீழ்பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணியையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாநில நெடுஞ்சாலை செயற்பொறியாளர் சிவசேனா, உதவி செயற்பொறியாளர் தனராஜன், நகராட்சி பொறியாளர், ஜோதிமணி, விழுப்புரம் தாசில்தார் ஆனந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story