தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா
கோட்டூரில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோட்டூர்;
கோட்டூரில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தீயணைப்பு நிலையம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கடந்த 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீயணைப்பு நிலையம் கட்டப்பட்டது. கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட சிறிய வாடகை கட்டிடத்தில் 25 ஆண்டுகளாக இந்த தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தில் நிலை அலுவலர், நிலைய அலுவலர் (போக்குவரத்து), சிறப்பு நிலைய அலுவலர், தீயணைப்பு வீரர்கள் 11 பேர் வாகன பழுது நீக்குபவர் ஒருவர் மற்றும் டிரைவர் ஆகியோரை காண்ட குழுவினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குச் சென்று தீயணைப்பு பணி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை பிடிக்கும் பணி மற்றும் அவசர கால பணிகளை செய்து வருகிறார்கள்.
25 ஆண்டுகளாக
கடந்த 25 ஆண்டுகளாக இந்த சிறிய கட்டிடத்தில் தான் தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த கட்டிடத்தி்ன் அருகே மிக பழமை வாய்ந்த பழுதடைந்த உயரமான வேளாண்மை அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து தீயணைப்பு நிலைய அலுவலகத்தின் மீது விழக்கூடிய அபாயம் உள்ளது.
புதிய கட்டிடம்
இங்கு தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தேவையான பயிற்சி மைதானம், அவசர காலத்துக்கு பயன்படுத்தக்கூடிய நீர்த்தேக்க தொட்டி போன்ற எந்த வசதியும் இங்கு இல்லை. குறுகலான சாலை வசதி கொண்ட இடத்தில் இந்த தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது.
எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி கோட்டூரில் தீயணைப்பு நிலையத்துக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story