குளச்சலில் இருந்து படகு மூலம் இலங்கை அகதிகள் கனடாவுக்கு தப்பிச்சென்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது


குளச்சலில் இருந்து படகு மூலம்  இலங்கை அகதிகள் கனடாவுக்கு தப்பிச்சென்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
x
தினத்தந்தி 15 March 2022 11:47 PM IST (Updated: 15 March 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

குளச்சல் கடல் வழியாக படகு மூலம் இலங்கை அகதிகள் கனடாவுக்கு தப்பிச் சென்ற வழக்கில் மேலும் ஒரு பெண்ணை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாகர்கோவில், 
குளச்சல் கடல் வழியாக படகு மூலம் இலங்கை அகதிகள் கனடாவுக்கு தப்பிச் சென்ற வழக்கில் மேலும் ஒரு பெண்ணை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
6 பேர் மீது வழக்கு
இலங்கையில் போர் நடந்த போது அகதிகளாக தமிழகத்துக்கு வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு வசித்து வந்தவர்களில் சுமார் 89 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை பெருமாள்புரம் அகதிகள் முகாமை சேர்ந்த கருணாநிதி என்ற நிதிஷ் (வயது 35) என்பவர் தலைமையில் குளச்சல் கடற்கரையில் இருந்து படகு மூலம் கனடாவுக்கு தப்பி சென்றனர்.
இவ்வாறு தப்பிச்செல்லும்போது டியோகார்ஷியா தீவு அருகில் அந்த நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குமரி மாவட்ட கியூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை தேடி வந்தனர்.
மேலும் ஒரு பெண்ணுக்கு தொடர்பு
இந்தநிலையில் அகதிகள் 89 பேர் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட படகு கேரள மாநிலத்தைச் சேர்ந்த படகாகும். குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜோசப்ராஜ் என்பவர் அந்த படகின் பங்குதாரர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும், அகதிகள் தப்பிச்செல்ல ஏற்பாடுகளைச் செய்த மதுரை கூடல்நகர் அகதிகள் முகாமைச் சேர்ந்த சுகந்தன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே 89 பேர் கனடாவுக்கு தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட படகை கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள குளத்துப்புழா திங்கள் கரிக்ககத்தை அடுத்த சந்தனக்காவு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (50) என்பவர் தனது பெயரில் கொல்லம் நீண்டகரை மீன்வள அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்தது தெரிய வந்தது. ஈஸ்வரியும் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் இவர் 1982-ம் ஆண்டுக்கு முன்பே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி வந்ததால் அவர் இந்திய பிரஜையாகி, அதே பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கனடாவுக்கு தப்பிச்சென்ற கருணாநிதியின் சித்தி ஆவார்.
கைது- சிறையில் அடைப்பு
இதையடுத்து ஈஸ்வரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கியூ பிராஞ்ச் பிரிவுக்கு வந்து ஆஜராகுமாறு அழைத்தனர். இதையடுத்து அவர் நேற்று நாகர்கோவில் வந்தார். அவரிடம் கியூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கருணாநிதி உள்ளிட்ட 89 பேர் கனடா தப்பிச்செல்ல தனது பெயரில் படகை பதிவு செய்து கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தக்கலையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஈஸ்வரியை 7-வது குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் தேடி வருகிறார்கள். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story