தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தக்கோரி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பாலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் மோகன் உள்பட விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குடும்பத்திற்கு 100 நாள் என்பதை வேலை கேட்கும் அனைவருக்கும் என திருத்தம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் உள்பட விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும். வீடில்லாத, நிலமற்ற குடும்பங்களுக்கு 400 சதுர அடியில் ரூ.6 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை ஆய்வு செய்ய முத்தரப்பு பிரதிநிதிகள் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story