வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்


வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 12:18 AM IST (Updated: 16 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி மாத உற்சவத்தையொட்டி வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சீர்காழி:
பங்குனி மாத உற்சவத்தையொட்டி வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பங்குனி மாத உற்சவ திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வமுத்து குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்) ஆகியோர் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 
இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி மாத உற்சவ திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
தேரோட்டம் 
இதனை தொடர்ந்து நேற்று அலங்கரிக்கப்பட்ட 4 தேர்களில் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையோடு விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் செல்வமுத்துக்குமாரசாமி, தையல்நாயகியுடன் வைத்தியநாதசாமி, அங்காரகன் (செவ்வாய்) ஆகியோர் தனித்தனியாக எழுந்தருளினர்.
இதனையடுத்து முதல் தேரான விநாயகர் தேரை கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் மேலவீதியில் இருந்து புறப்பட்டு வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேலவீதியில் நிலையை அடைந்தது. இதையடுத்து கோவிலை செல்வமுத்துகுமாரசாமி தேர், வைத்தியநாதசாமி தேர், அங்காரகன் ஆகிய தேர்கள்  வலம் வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், வைத்தீஸ்வரன் கோவில் சப்-இன்ஸ்பெக்டர் காயத்திரி மற்றும் போலீசார் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி  நான்கு வீதிகளிலும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி செயல் அலுவலர் மருது பாண்டியன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர். 
இதனைத்தொடர்ந்து வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திரம் நிகழ்ச்சியும், 21-ந்தேதி (திங்கட்கிழமை) தெப்ப உற்சவமும். 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகின்றன.

Next Story