கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2022 1:09 AM IST (Updated: 16 March 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

சிவகாசி, 
சிவகாசி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
2 குழந்தைகளின் தாய்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 32). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் பூக்கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் ராமலட்சுமிக்கும் வெம்பக்கோட்டை தாலுகா பழையாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (41) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாகியது. 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னீர்செல்வமும், ராமலட்சுமியும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி கேரள மாநிலம் மூணாறு சென்றுவிட்டனர். பின்னர் 2 வாரங்கள் கழித்து, மணிகண்டன் தனது மனைவியை சமாதானம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்தார். 
வாய்ஸ் மெசேஜ்
அதன்பின்னர் ராமலட்சுமி தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன்  வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் கடந்த 11-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு மணிகண்டன் செல்போனுக்கு “வாய்ஸ் மெசேஜ்” ஒன்று வந்தது. அதில் பேசிய ராமலட்சுமி, தான் பன்னீர்செல்வத்துடன் செல்வதாக கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் தனது மனைவியை பல இடங்களில் தேடினார். 
ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் மணிகண்டனுக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி, பழையாபுரத்துக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
தற்கொலை
நேற்று காலை 8.30 மணிக்கு மேலப்பழையாபுரத்தை சேர்ந்த ஒருவர் மணிகண்டனுக்கு போன் செய்து, சாத்தூர்-ராஜபாளையம் ரோட்டில் ஒரு இடத்தில் ராமலட்சுமியும், பன்னீர்செல்வமும் இறந்து கிடப்பதாகவும், அவர்களின் அருகில் விஷ பாட்டில் கிடப்பதாகவும் தெரிவித்தார். 
இதைதொடர்ந்து மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு இறந்து கிடந்தது ராமலட்சுமி, பன்னீர்செல்வம் என உறுதி செய்தனர். பின்னர் மாரனேரி போலீசில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுபகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து, 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்ட பன்னீர்செல்வம் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரும் ஏற்கனவே திருமணமானவர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story