நெற்குவியல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியதில் வாலிபர் பலி


நெற்குவியல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியதில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 March 2022 1:27 AM IST (Updated: 16 March 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெற்குவியல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியதில் வாலிபர் உயிரிழந்தார்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல்மணிகளை உடனுக்குடன் எடைபோட்டு பெறாமல் ஆமை வேகத்தில் வேலை நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு நெல்மணிகளை கொண்டு வரும் விவசாயிகள் தாமதம் காரணமாக திருமழபாடியில் இருந்து திருமானூர் செல்லும் சாலையிலேயே நெல்மணிகளை குவியல், குவியலாக கொட்டி வைத்துள்ளதால் தற்போது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஒருவழி சாலைபோல் சாலை மாறிவிட்டது‌.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 37). இவர் தனது நெல் அறுவடை எந்திரம் மூலம் திருமழபாடி, கண்டராதித்தம், இலந்தைக்கூடம், அரண்மனைகுறிச்சி உள்ளிட்ட பகுதியில் உள்ள வயல்களில் நெல் அறுவடை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் திருமழபாடியில் உள்ள ஓட்டலுக்கு சென்று உணவு வாங்கிக்கொண்டு, மீண்டும் வயலுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். நெல் கொள்முதல் நிலையம் அருகே வந்தபோது அங்கு தெருவிளக்குகள் இல்லாதநிலையில், எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் நெல் குவியலின் மீது ஏறியது. இதில் சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட அவர் தலைகீழாக கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள், வெங்கடேசனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை திருமானூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story