குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
ெநல்லை மாநகராட்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் சரவணனிடம் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.
நெல்லை:
ெநல்லை மாநகராட்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் சரவணனிடம் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகராட்சியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மேயர் பொதுமக்களிடம் குறை கேட்கும் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக மேயர் இல்லாததால் சில நேரங்களில் ஆணையாளர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
இந்த நிலையில் தற்போது புதிதாக மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மனுக்கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாநகர பொறியாளர் நாராயணன், சுகாதார அதிகாரி ராஜேந்திரன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், லெனின், அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின் விளக்கு
ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாளையங்கோட்டை நேசநாயனார் தெருவில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிடத்தை சீரமைத்து தர வேண்டும். அம்பேத்கர்நகரில் சாலை மற்றும் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும். நெல்லை டவுன் குடிசை மாற்று வாரிய காலனியில் புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முன்னாள் கவுன்சிலர் உமாபதி சிவன் கொடுத்த மனுவில், 33-வது வார்டில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பல சாக்கடைகள் அள்ளப்படாமல் உள்ளது. குப்பைத்தொட்டிகள் போதியளவு இல்லை. எனவே போதிய பணியாளர்களை நியமித்து சுகாதார பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
குடிநீர் பிரச்சினை
இதேபோல் குடிதண்ணீர் பிரச்சினை, குடிநீர் குழாய் உடைப்பு பிரச்சினை, சாக்கடை, கழிப்பறை, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்று ஏராளமான பொதுமக்கள் மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story