ஆலங்குளத்தை மையமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம்; கலெக்டரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


ஆலங்குளத்தை மையமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம்; கலெக்டரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 March 2022 2:05 AM IST (Updated: 16 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தை மையமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என கலெக்டரிடம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜை, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறிஇருப்பதாவது:-
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சிறு, சிறு அலுவலகங்களாக பிரிந்து கட்டிடங்களும் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் வளாகத்தினுள் ஆங்காங்கே சிதிலமடைந்த கட்டிடங்கள் இருப்பதால் இடம் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றை அமைத்துதர நடப்பாண்டில் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
மேலும் மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன், மாவட்ட கல்வி அலுவலரின் பணிச்சுமை மற்றும் பள்ளி அலுவலர்களின் போக்குவரத்து நேரத்தை குறைக்கும் பொருட்டு, ஆலங்குளம் ஒன்றியம், ஆலங்குளம் பேரூராட்சி, கடையம் ஒன்றியம், கீழப்பாவூர் ஒன்றியம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவற்றை முறையாக தென்காசி மற்றும் சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் இருந்து பிரித்து, ஆலங்குளத்தை மையமாக கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை உருவாக்க வேண்டும். கீழப்பாவூர் ஒன்றியம் கரும்பனூர் கிராமத்தில் கரும்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையில் புதிய தார்சாலையும், கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் முதல் தெற்கே ஒரு வழியாக மடத்தூர் வரை செல்லும் சாைலயை சீரமைக்கவும் வேண்டும்.
ஆலங்குளம் தாலுகா மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் மோட்டார் வாகன தகுதிச்சான்று புதுப்பிக்க, ஓட்டுனர் உரிமம் பெற, புதிய வாகனம் பதிவு செய்ய போன்ற தேவைகளுக்கு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே ஆலங்குளம் பகுதிக்கு என புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் நடப்பாண்டில் அமைத்துதர வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story