உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.61 லட்சம் மானிய நிதி
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.61 லட்சம் மானிய நிதியை மாவட்ட கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
சேலம்:-
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.61 லட்சம் மானிய நிதியை மாவட்ட கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
மானிய நிதி
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழு மற்றும் தொழில் குழுக்களுக்கு மானிய நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு உற்பத்தியாளர் குழு மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ.61 லட்சத்து 4 ஆயிரம் தொடக்க மானிய நிதியை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
154 கிராம ஊராட்சிகள்
சேலம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்டம்) ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சங்ககிரி மற்றும் ஆத்தூர் ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள 154 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
விவசாய உற்பத்தியாளர்களை குழுவாக ஒன்றிணைத்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும், உபரி விளைப்பொருட்களை திரட்டவும், தேவையான தொழில்நுட்பத்தை புகுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உற்பத்தி செலவை குறைத்து வருமானத்தை பெருக்கவும், சந்தை வாய்ப்பை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்ற உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊரகப்பகுதிகளில் ஒரே மாதிரியான தொழில்களில் ஈடுபடும் மகளிரை ஒன்றிணைத்து தொழிற்குழுக்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு
மேலும், சமுதாய பண்ணை பள்ளிகள் மூலம் ஊராட்சிகளில் உள்ள விவசாய நிபுணர்கள் கொண்டு ஊரக மகளிர்களுக்கு விவசாயம் சார்ந்த (நிலக்கடலை, மரவள்ளி, காய்கறிகள், பருப்பு, சிறு தானிய வகைகள்) பயிற்சிகளை அளித்து விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சமுதாய திறன் பள்ளிகள் மூலம் ஊராட்சிகளில் உள்ள மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி அளித்து சுயத்தொழில் அல்லது வேலைவாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ரூ.61 லட்சம்
இத்திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத ஒரே தொழிலை ஏற்று நடத்தும் மகளிரை ஒன்றிணைத்து புதிதாக தொடங்கப்பட்ட 18 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 13 தொழில் குழுக்களுக்கு தொடக்க நிதியாக தலா ரூ.75 ஆயிரம் வீதம் 31 குழுக்களுக்கு ரூ.23 லட்சத்து 25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
இதேபோல், 36 சமுதாய பண்ணை பள்ளி, 17 சமுதாய திறன் பள்ளிகள் மூலம் பயிற்சி வழங்க ரூ.37 லட்சத்து 79 ஆயிரம் என மொத்தம் ரூ.61 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story