செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
மதுரையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகையை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகையை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
45 பவுன் நகை திருட்டு
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்தவர் விமலநாதன். செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் மராமத்து வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை திறந்து வைத்து வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று அந்த வீட்டின் பீரோவில் இருந்த நகை பெட்டியை காணவில்லை. அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. இதுகுறித்து விமலநாதன் திலகர்திடல் போலீசில் புகார் அளித்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை தலைமையில் உதவி கமிஷனர்கள் பழனிக்குமார், ரவீந்திரபிரகாஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
2 பேர் சிக்கினர்
அதில் திறந்து கிடக்கும் வீட்டில் செல்போன்களை திருடும் நபர்களாக மதுரை சப்பாணிகோவில் தெருவை சேர்ந்த பொன்மணி(வயது 19), தெற்குமாசி வீதி காஜா தெருவை சேர்ந்த சுந்தரேசன்(19) ஆகியோர் வீட்டிற்குள் புகுந்து நகை பெட்டியை தூக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்ற போது அவர்கள் கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய உடைகளை போலீசார் கண்டுபிடித்தனர். இதன் மூலம் அவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து போலீசார் அவர்களை கண்காணித்து கொடைக்கானலில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் நகை பெட்டியை திருடி வந்து அதனை ரெயில்வே தண்டவாள பகுதியில் உடைத்து அதில் இருந்த நகையை திருடி சென்றதாக ஒப்புக்கொண்டனர். அதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 45 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்தது
திருட்டு சம்பவம் நடந்து 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். மேலும் அவர் கூறும் போது, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க மிகவும் உதவியது கண்காணிப்பு கேமரா தான். கண்காணிப்பு கேமரா மூலம் மதுரை நகரில் தற்போது நடைபெறும் குற்றச்சம்பவங்களை விரைவாக கண்டுபிடிக்க முடிகிறது.
மேலும் மதுரை மாநகர காவல்துறை சார்பில் நகரின் 2,719 முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 12,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களைத் தடுப்பதிலும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் கண்காணிப்பு கேமராவின் பங்கு பெரும் உதவியாக இருப்பதால், பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் பொருத்த வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story