ஹிஜாப் வழக்கு: கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து தலைவர்கள் கருத்து
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
பெங்களூரு:
விமர்சிக்க மாட்டேன்
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை விமர்சிக்க மாட்டேன். தீர்ப்பை முழுவதுமாக படிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு விளக்கமான கருத்தை கூறுவேன். முஸ்லிம் மாணவிகள் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து வருவதால் யாருக்கும் தொந்தரவு இல்லை, இழப்பும் இல்லை என்று தான் கூறினோம். ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அனைவரும் தலைவணங்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
எடியூரப்பா
இந்த தீர்ப்பு குறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
‘‘ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு, மதத்தை விடவும், அதன் மீதான நம்பிக்கையை விடவும் அரசியல் அமைப்பு உயர்ந்தது என்று தெரியப்படுத்துகிறது. ஐகோர்ட்டின் உத்தரவை அனைவரும் மதித்து மேற்கொண்டு இந்த விவகாரத்தை தொடராமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்’’.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரசாமி-டி.கே.சிவக்குமார்
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறும்போது, ‘‘சீருடை விஷயத்தால் சமுதாயத்தில் அமைதி பாதிக்கப்பட்டது. கல்வி பாழானது. குழந்தைகளின் எதிர்காலத்தில் அலட்சியம் வேண்டாம். ஐகோர்ட்டு தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ஹிஜாப் விஷயத்தில் எனது கவலை என்னவென்றால் கல்வி மற்றும் சட்டம்-ஒழுங்கு தான். சட்டம்-ஒழுங்கை காப்பது மற்றும் கல்வி யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் உறுதி செய்வது அரசின் கடமை. மதங்களை தாண்டி அனைத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மடாதிபதி சித்தலிங்கசுவாமி
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சித்தலிங்கசுவாமி கூறுகையில், ‘‘ஹிஜாப் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பால் யாரும் ஆதங்கப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
கர்நாடகத்தின் பாரம்பரியத்தை பின்பற்றி அனைவரும் அமைதியாக இருங்கள். கல்வி நிலையங்களில் அனைவரும் சமம். அனைவரும் அன்போடும், ஒற்றுமையோடும் இருங்கள். அதைவிடுத்து வேறு எந்த விஷயங்களுக்கும் வாய்ப்பு கொடுக்காதீர்கள்’’ என்று கூறினார்.
மந்திரி ஈசுவரப்பா
தீர்ப்பு பற்றி மந்திரி ஈசுவரப்பா கூறுகையில், ‘‘ஹிஜாப் விவகாரத்தில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பால் யாரும் ஆதங்கப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். மாணவ-மாணவிகளை பள்ளி, கல்லூரிகளுக்கு சரியாக செல்லும்படி பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கெட்டுவிடக்கூடாது.
கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் மதித்து பின்பற்ற வேண்டும். ஹிஜாப் வழக்கில் கோர்ட்டு அனைவருக்கும் சமமான தீர்ப்பு வழங்கி உள்ளது’’ என்றார்
ரகுபதி பட் எம்.எல்.ஏ.
இந்த தீர்ப்பு குறித்து உடுப்பி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா பிரமுகருமான ரகுபதி பட் கூறுகையில், ‘‘ஹிஜாப் விவகாரத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 6 மாணவிகளும் அடம் பிடிக்காமல் வகுப்புகளுக்கு வர வேண்டும். அவர்கள் அனைவருக்கும் சமமான கல்விதான் பயிற்றுவிக்கப்படுகிறது. இத்தனை நாட்கள் அவர்களது கல்வி பாதிக்கப்பட்டதற்கு அவர்களுக்கு பிரத்யேக வகுப்புகள், குறிப்புகள் வழங்கப்படும்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் முஸ்லிம் நீதிபதியும் ஒருவர் ஆவார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை தேசிய அளவில் கொண்டு சென்று இந்து - முஸ்லிம் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி விடக்கூடாது’’ என்று கூறினார்.
நடிகை தாரா
இதுபற்றி கதக்கில் நடிகை தாரா கூறுகையில், ‘‘வீடுகளில் நமது சாதி, அதன் தர்மம் ஆகியவற்றை பின்பற்றுங்கள். இது எல்லாத்தையும் கடந்து ஒற்றுமையாக இருக்கும் இடம்தான் நமது தேசம். கல்வி நிலையங்கள் கோவில்கள் போன்றவை.
அங்கு சாதி, மதம், ஏழை, பணக்காரன் இப்படி எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பாடம் நடத்துகிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் நாம் சாதி, தர்மத்தை புகுத்தக்கூடாது. கல்வி நிலையங்களில் அனைவரும் சமம் என்பதை வெளிப்படுத்துவதான் சீருடை’’ என்று கூறினார்.
Related Tags :
Next Story