ஈரோடு கருங்கல்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
வருமுன் காப்போம் திட்டம்
ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்பாடுகள் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டு உள்ளன.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் சிறப்பாக நடத்தப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு மாநகராட்சி சார்பில் கருங்கல்பாளையம் காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.
அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் மருத்துவ பணியாளர்கள் ஏற்பாடு செய்து இருந்த பரிசோதனை வசதிகள், பொதுமக்களுக்கு டாக்டர்கள் அளித்த மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் கர்ப்பிணிகளுக்கான தாய்- சேய் நல பரிசு பெட்டகம் வழங்கி வாழ்த்தினார். 10 பெண்கள் பரிசு பெட்டகம் பெற்றுக்கொண்டனர்.
தீர்வு
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:-
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்தது. பின்னர் மீண்டும் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை இந்த திட்டம் மூலம் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
தற்போது மீண்டும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இந்த திட்டத்தின் படி ஆண்டுக்கு சுமார் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இதய நோய், பல் மருத்துவம், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு, மன நலம் என்று அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
42 இடங்கள்
இந்த முகாம் மூலம் பொதுமக்களுக்கு நோய் பிரச்சினைகள் கண்டறியப்பட்டால் அவர்கள் உயர் சிகிச்சைகளுக்காக உரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நவீன மருத்துவ சிகிச்சைகள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 385 வட்டாரங்களில் ஆண்டுக்கு தலா 3 முகாம்கள் நடத்தும் வகையில் ரூ.3 கோடியே 85 லட்சம் செலவழிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாமை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
பரிசோதனைகள்
ஈரோட்டில் நேற்று நடந்த முகாமில் ரத்த பரிசோதனை, குடல் நோய் பரிசோதனை, இதய நோய் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, பெண்களுக்கு கர்ப்ப பை பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, கொரோனா பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர தி.மு.க. செயலாளர் மு.சுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜெயந்தி ராமச்சந்திரன், கீதாஞ்சலி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலைஞரின் வருமுன காப்போம் சிறப்பு திட்ட முகாம் வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரெயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story