‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பெயர் பலகை சரிசெய்யப்படுமா?
சென்னை கொளத்தூர் யுனைடேட் காலனி 1-வது குறுக்கு தெருவின் பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் இத்தெருவை தேடி வருவோர் சிரமம் கொள்ள நேரிடுகிறது. இந்த பெயர் பலகை சரிசெய்து பழைய இடத்திலேயே பொருத்தப்படுமா?
- கிருஷ்ணமூர்த்தி, கொளத்தூர்.
படுமோசமான சாலையால் சிரமம்
சென்னை எருக்கஞ்சேரி எத்திராஜ் சாமி சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. இதில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு உள்ளாகியும் வருகிறார்கள். இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- சித்திக், எருக்கஞ்சேரி.
அடிக்கடி பழுதாகும் எஸ்கலேட்டர்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில் நிலையம் எதிரில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்காக சமீபத்தில் எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டது. இந்த எஸ்கலேட்டர் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. இதனால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட எஸ்கலேட்டர் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- ரமேஷ், தாம்பரம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் 2-வது மெயின்ரோட்டில் உள்ள கழிவுநீர் வடிகால்வாயின் மூடி சாலையை விட உயரமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் போக்கு தொடருகிறது. இரவு நேரத்தில் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. எனவே ஆபத்தான இந்த மூடி சீரமைக்கப்படுமா?
- சந்துரு, விருகம்பாக்கம்.
சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை ‘சிப்காட்’ அலுவலகம் எதிரில் நடைபாதையில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் இருக்கிறது. மேலும் இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து உள்ளன. மக்கள் அச்சத்துடனேயே இப்பகுதியை கடக்கிறார்கள். மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?
- பிரசாந்த், இருங்காட்டுக்கோட்டை.
மின்வாரியம் கவனிக்குமா?
சென்னையை அடுத்த அண்ணனூர் ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. விபரீதங்கள் ஏற்படும் முன்பாக மின்வாரியம் உரிய கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஐசக் பால்சிங் ஷாம், அண்ணனூர்.
கால்வாய்க்கு மூடி எங்கே?
திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி பிராடிஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடியின்றி ஆபத்தான முறையில் காட்சி தருகிறது. இதனால் எதிர்பாராத விபத்துகளும் அரங்கேற வாய்ப்பிருக்கிறது. எனவே மக்கள் நலன் காக்கும் நடவடிக்கையாக இந்த கால்வாய்க்கு மூடி ஏற்படுத்தப்படுமா?
- பன்னீர்செல்வம், திருவள்ளூர்.
பயணிகளின் சிரமம் தீர்க்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி இயக்கப்படும் மாநகர பஸ் (தடம் எண்:- 580) சரியான நேரத்தில் இயக்கப்படுவதே கிடையாது. இதனால் ஒரே நேரத்தில் அந்த வழித்தடத்தில் 4 பஸ்கள் வரை அடுத்தடுத்து செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் சிரமம் அடைகிறார்கள். போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்குமா?
- பயணிகள்.
அகற்றப்படாத குப்பைகளால் அலங்கோலம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காயரம்பேடு தமிழ்செல்வி நகர் பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதே கிடையாது. இதனால் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து அலங்கோலமாக காட்சி தருகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் தேங்கும் குப்பைகளை முறையாக அகற்ற தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட வேண்டும்
- தினகரன், மாங்காடு.
திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்
சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. இந்த கால்வாயை தற்காலிகமாக ஒரு வலையை வைத்து மூடி வைத்திருக்கின்றனர். இதன் அருகேயே குழந்தைகள் விளையாடியும் வருகிறார்கள். இந்த கால்வாயை நிரந்தரமாக மூட உரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்வார்களா?
- தெருமக்கள், சுனாமி குடியிருப்பு.
Related Tags :
Next Story