படிப்பில் விருப்பம் இல்லாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருநின்றவூரில் படிப்பில் விருப்பம் இல்லாத காரணத்தால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் திருவேங்கடம் அவென்யூவில் வசித்து வருபவர் மாதவி. இவரது கணவன் சீனிவாசன். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மாதவியின் கணவர் சீனிவாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து தனியாக சென்றுவிட்டார். மாதவி தனது 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இவர் சென்னை ரிப்பன் மாளிகையில் வேலை செய்து வருகிறார். இவரது 3-வது மகள் வரலட்சுமி (வயது 20) பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத் துவக்கல்லூரியில் பி.எஸ்.சி. கார்டியாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் வீட்டில் அனைவரிடமும் பேசிவிட்டு படுக்கை அறைக்கு ஓய்வு எடுப்பதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வரலட்சுமி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவரை கீழே இறக்கி ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்து திருநின்றவூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வரலட்சுமிக்கு படிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஏற்கனவே நடந்த தேர்வுகளில் சரியாக மார்க் எடுக்கவில்லை என்பதும், நேற்று முன்தினம் நடந்த தேர்வை சரியாக எழுதாமல் இருந்ததாலும் கடந்த ஒரு வாரமாக வரலட்சுமி மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரது வீட்டில் வரலட்சுமி தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்த கடிதத்தை போலீசார் பார்த்தனர். அதில் எனக்கு வாழ்க்கை பிடிக்கவில்லை, படிப்பில் எனக்கு ஆர்வம் இல்லை, எனக்கு நடனத்தில் தான் ஆர்வம். நடனம் தான் எனக்கு பிடிக்கும் என எழுதி இருந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story