45,700 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்
வேலூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்கள் 45,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்கள் 45,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியா முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி (கோர்பேவேக்ஸ்) செலுத்தும் பணி தொடங்கியது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 45,700 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் தொடக்க நிகழ்ச்சி வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேஸ்வரா பள்ளி தலைமையாசிரியர் நெப்போலியன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் பள்ளி மாணவர்களின் பெயர், பெற்றோரின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தடுப்பூசி செலுத்தினார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி வரும் முகாம்களில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 28 நாட்களுக்கு பின்னர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாநகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story