போதிய ஆசிரியர்கள்-அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள்-அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
மன்னார்குடி:
அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள்-அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
கோரிக்கை மனு
மன்னார்குடியை அடுத்த மேலவாசலில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்பு மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் 35-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனு அளிக்க நேற்று வந்தனர். அங்கு மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன் இல்லாததால் அவரது உதவியாளர் ரவி என்பவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
3 ஆசிரியர்கள்
மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகள் இயங்கி வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் மொத்தம் உள்ள 7 வகுப்புகளுக்கும் சேர்த்து 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் இருக்கை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையால் எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகளுக்கு வாரம் 1 நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. 3,4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது.
அடிப்படை வசதிகள்
இதனால் குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் மாணவ, மாணவிகளுக்கு போதிய இருக்கைகள் மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----
Related Tags :
Next Story