நகராட்சி அலுவலர்களை கண்டித்த கலெக்டர்
தேனியில் நோய் பரவும் வகையில், குப்பைகள் குவிந்து கிடந்ததால் நகராட்சி அலுவலர்களை கலெக்டர் கண்டித்தார்.
தேனி:
தேனி பாரஸ்ட்ரோடு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் பாதையில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று அந்த பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்புகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் பாரஸ்ட்ரோட்டில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு இருந்தது.
துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடாக காட்சி அளித்ததால் உடனடியாக நகராட்சி அலுவலர்களை கலெக்டர் தொடர்பு கொண்டு, குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் இதுபோன்று அப்புறப்படுத்தப்படாமல் குப்பைகள் குவிந்து கிடந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
கலெக்டரின் கண்டிப்பை தொடர்ந்து, நகராட்சி தூய்மை பணியாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். குப்பைகளை அள்ளி லாரியில் ஏற்றி குப்பைக் கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் அல்லிநகரம் கருமாரியம்மன் கோவில் அருகில் கண்மாய் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டார். அவற்றையும் சுத்தம் செய்ய நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story