விஜயநகர் அருகே, பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது: பெண்கள் உள்பட 5 பேர் பலி
விஜயநகர் அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். ராமேசுவரத்திற்கு சுற்றுலா சென்றவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது
விஜயநகர்: விஜயநகர் அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். ராமேசுவரத்திற்கு சுற்றுலா சென்றவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
விஜயநகர் மாவட்டம் கூட்லகி தாலுகா பன்விஹல்லு கிராம பகுதியில் நேற்று காலை ஒரு ஜீப் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் ஒசஹள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்று ஜீப்பில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜீப்பின் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் இறந்தது தெரியவந்தது. 11 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மேலும் 2 பேர் இறந்தனர். மற்ற 9 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரத்திற்கு சென்ற போது...
இதற்கிடையே விபத்தில் இறந்த 5 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது விபத்தில் பலியானவர்கள் விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தியை சேர்ந்த சித்ரய்யா கலகி(வயது 42), கல்லவ்வா(60), குந்தவ்வா(50), நீலம்மா(54), லட்சுமிபாய்(60) என்பது தெரியவந்தது.
படுகாயம் அடைந்தவர்களின் பெயர்கள் உடனடியாக தெரியவில்லை. இவர்கள் அனைவரும் நிடகுந்தியில் இருந்து தமிழ்நாடு ராமேசுவரத்திற்கு சுற்றுலா சென்றதும், அப்போது ஜீப் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஒசஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story