ஓடை புறம்போக்கில் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ்
ஓடை புறம்போக்கில் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ்
திருப்பூர்:
திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் ஓடை புறம்போக்கில் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டையார் நகர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நொய்யல் ஆறு, சங்கிலிப்பள்ளம் ஓடை, ஜம்மனை ஓடை செல்கிறது. இதன் கரையோரம் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இந்த தநிலையில் நீர்நிலை புறம்போக்கு, ஓடை புறம்போக்கில் குடியிருப்பவர்களின் வீடுகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதியில் ஓடை புறம்போக்கில் உள்ளவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர், காவல்துறையினரின் துணையோடு குடியிருப்புவாசிகளிடம் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கி வருகிறார்கள்.
அதன்படி நேற்று பட்டுக்கோட்டையார் நகரில் சங்கிலிப்பள்ளம் ஓடையோரம் குடியிருக்கும் 41 வீடுகளுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்ய சென்றனர். அங்கு 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதை அப்பகுதி மக்கள் வாங்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து அறிவிப்பு நோட்டீசை அவரவர் வீட்டின் முன்பு ஓட்டி விட்டு அதிகாரிகள் சென்றனர். அதில் ஓடைபுறம்போக்கில் குடியிருக்கும் வீடுகளை 7 நாட்களுக்குள் காலி செய்து விட்டு செல்லுமாறு அறிவித்துள்ளனர்.
வாக்குவாதம்
இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டையார் நகர் பகுதியை சேர்ந்த தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் அதிகாரிகளிடம் விவரம் கேட்டனர். ஓடை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து ரூ.1½ லட்சம் செலுத்த அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் அவ்வளவு தொகையை செலுத்த முடியாது என்று கூறி இங்கேயே குடியிருப்பதாக எழுத்து மூலமாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்தநிலையில் நோட்டீஸ் கொடுத்தது குறித்து அதிகாரிகளிடம் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர்.
ஓடையை தூர்வாரி கரையை பலப்படுத்தி குடியிருப்புகளை அகற்றாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பின்னர் இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) மேயர், ஆணையாளரை நேரில் சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்தனர். இதுபோல் நேற்றுமுன்தினம் தென்னம்பாளையம் முத்தையன் கோவில் பகுதியில் ஓடைபுறம்போக்கில் குடியிருக்கும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் இதுபோல் நோட்டீஸ் வழங்க சென்றுள்ளனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினார்கள். எதிர்ப்பு தெரிவிக்கவே மீதம் உள்ளவர்களுக்கு பதிவு தபாலில் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story