திறக்கப்படாமல் உள்ள பூங்கா
திறக்கப்படாமல் உள்ள பூங்கா
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டில் ரூ.43½ லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
தொழில்நகரமான திருப்பூரில் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா மட்டுமே பிரதான பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூர் மாநகரின்அனைத்து பகுதிகளில் இருந்து குழந்தைகள், பெண்கள், வடமாநில தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பூங்காவிற்கு வருவதால் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்தந்த வார்டுகளில் உள்ள ரிசர்வ் சைட்டில் பலலட்சம் மதிப்பில் பூங்காக்களை அமைத்து வருகிறது. இதனால் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தால் அந்தந்த பகுதிகளிலேயே உள்ள பூங்காவுக்கு சென்று மாலை நேரங்களில் பொழுதை போக்குவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பூங்கா திறக்கப்படுமா?
இந்த நிலையில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக உள்ள மாநகராட்சி 7-வது வார்டு குருவாயூரப்பன்நகரில் ரூ.43½ மதிப்பில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டது. அங்கு அனைத்து பணிகளும் நிறைவடைந்து பல மாதங்களாகியும் பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பூங்காவின் சுற்றுப்பகுதி முழுவதும் கால்நடைகளின் உறைவிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது.
குப்பை அதிக அளவில் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக திறக்கப்படாததால் பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டது. எனவே பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு, யாருக்கும் பயனின்றி திறக்கப்படாமல் உள்ள பூங்காவை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story