கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15,645 கோடி செலவு-பசவராஜ் பொம்மை தகவல்


கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15,645 கோடி செலவு-பசவராஜ் பொம்மை தகவல்
x
தினத்தந்தி 16 March 2022 9:54 PM IST (Updated: 16 March 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15,645 கோடி செலவு செய்யப்பட்டதாக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15,645 கோடி செலவு செய்யப்பட்டதாக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு வளர்ச்சிக்கு...

கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 4-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி உள்பட பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். இந்த விவாதத்திற்கு பசவராஜ் பொம்மை பதிலளித்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக பொருளாதாரம் மீண்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வாி வசூலும் அதிகரித்துவிட்டது. நகரத்தோனா திட்டத்தின் கீழ் பெங்களூரு வளர்ச்சிக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அரசின் சேவைகள்

கிராம ஒன் திட்டம் தற்போது 14 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். விவசாயிகளின் வருவாயை பெருக்குவதில் பால் பண்ணை தொழில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. இதில் மாதம் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.

அதனால் பால் தொழிலுக்கு தனி வங்கி தொடங்கப்படுகிறது. சுகாதாரம், கல்வித்துறைக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திராவகம் (ஆசிட்) தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களை இந்த சமுதாயம் முற்றிலுமாக புறக்கணிக்கிறது. அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கான மாத உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயாத்தப்படுகிறது.

நவீன மீன்பிடி படகுகள்

மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க உதவி செய்யும் வகையில் 100 நவீன மீன்பிடி படகுகள் வாங்கப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 645 கோடி செலவு செய்துள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடாக கர்நாடகத்திற்கு ரூ.97 ஆயிரத்து 680 கோடி வழங்கி இருக்க வேண்டும். 

ஆனால் இதுவரை ரூ.54 ஆயிரத்து 263 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ரூ.30 ஆயிரத்து 514 கோடி கடன் பெற அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு ரூ.12 ஆயிரத்து 909 கோடியை வழங்கும். மொத்த பட்ஜெட்டில் சம்பளம் உள்ளிட்ட அரசின் செலவுகளை 89 சதவீதமாக குறைத்துள்ளோம்.

வளர்ச்சி பணிகள்

சித்தராமையா ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் 107 சதவீதம் கடன் வாங்கப்பட்டது. பெங்களூருவின் வெளிவட்டச்சாலை திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டு பணிகளுக்கு பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 230 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மத்தியிலும்-மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு இருப்பதால் தான் வளர்ச்சி பணிகள் துரிதமாக நடக்கின்றன. வரும் நாட்களில் இந்த இரட்டை என்ஜின் அரசால் மேலும் வளர்ச்சி பணிகள் நடைபெறும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Next Story