மும்பையில் ஐ.பி.எல். வீரர்களின் பஸ் மீது தாக்குதல்- நவநிர்மான் சேனா தொண்டர்கள் கைது
மும்பையில் ஐ.பி.எல். வீரர்களின் பஸ் மீது தாக்குதல் நடத்திய நவநிர்மான் சேனா தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஐ.பி.எல். அணியினர் சிலர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ளனர்.
இந்தநிலையில் ஐ.பி.எல். அணி நிர்வாகிகள் மற்றும் வீரர்களை அழைத்து செல்லும் பஸ்களை இயக்கும் ஒப்பந்தம் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு பதில் டெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதாக ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் போக்குவரத்து பிரிவை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் பதாகைகளை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் அருகே ஐ.பி.எல். அணிகளின் உறுப்பினர்களை ஏற்றி செல்லும் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த நவநிர்மாண் சேனாவினர் அந்த பஸ்சின் மீது கற்களை வீசியதுடன், அதன் ஜன்னல் கண்ணாடிகளை தடியால் அடித்து உடைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் இது தொடர்பாக நிவநிர்மாண் சேனா கட்சியின் போக்குவரத்து பிரிவை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story