கோவில் நிலத்தை ரூ.50 லட்சத்துக்கு விற்று மோசடி


கோவில் நிலத்தை ரூ.50 லட்சத்துக்கு விற்று மோசடி
x
தினத்தந்தி 16 March 2022 10:13 PM IST (Updated: 16 March 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில், கோவில் நிலத்தை ரூ.50 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் குருவையா. அவருடைய மகன்கள் வேல்முருகன், சிவக்குமார், ராஜ்குமார். மகள்கள் விஜயலட்சுமி, விஜயகுமாரி. 

இவர்கள் 5 பேரும் ஆண்டிப்பட்டியில் ஏத்தங்கோவில் சாலையில் தலா 5 சென்ட் வீதம் 25 சென்ட் நிலத்தை ரூ.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினர். கடந்த 2003-ம் ஆண்டில் வாங்கப்பட்ட அந்த நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்து தரக்கோரி, ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமீபத்தில் அவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

அப்போது அந்த நிலம், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு பாத்தியப்பட்டது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து தங்களுக்கு நிலத்தை விற்பனை செய்த ஆண்டிப்பட்டி, தேனியை சேர்ந்த 2 பேரிடம் இது தொடர்பாக கேட்டனர். ஆனால் அவர்கள் சரிவர பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. 

குத்தகை அடிப்படையில் மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருந்த கோவில் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே தங்களை ஏமாற்றி ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 5 பேர் ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்க கிருஷ்ணனிடம் புகார் அளித்தனர்.

 அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கோவில் நிலத்தை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து முன்னணி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story