வேகமாக சென்ற கார் அடுத்தடுத்து மோதி 4 பேர் படுகாயம்
புவனகிரி பகுதியில் வேகமாக சென்ற கார் அடுத்தடு்த்து மோதி 4 பேர் படுகாயம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வேகத் தடை அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புவனகிரி
புவனகிரி அருகே வளையமாதேவி, எறும்பூர் கிராமங்களின் வழியாக செல்லும் சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத கார் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அந்த கார் ஆதிவராகநத்தம் பகுதியில் வந்தபோது மோதியதில் அதே பகுதியை சேர்ந்த பக்கிரி(வயது 50) என்பவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் வேகமாக சென்ற கார் அடுத்தடுத்து மோதி 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆதிவராகநத்தம் பகுதியில் அதிவேகமாக செல்லும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story