ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி


ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி
x
தினத்தந்தி 16 March 2022 11:55 PM IST (Updated: 16 March 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலூர், மார்ச்.17-

கடலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022-ம் ஆண்டு வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி அனைவருக்கும் கவாத்து பயிற்சி, நவீன ஆயுதங்களை கையாளுதல், கலவரத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வருகிற 30-ந் தேதி வரை நடைபெறும். இப்பயிற்சி காலத்தில் ஆயுதப்படை காவலர்களின் பணியை, தாலுகா போலீஸ் நிலைய போலீசார் மேற்கொள்வார்கள்.

இதற்கிடையே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்படி கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர கவாத்து பயிற்சி காலத்தில், தாலுகா போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரின் மன அழுத்தத்தினை போக்கும் வகையில் ஒவ்வொரு உட்கோட்டத்திலிருந்தும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 5 தலைமை காவலர்கள் மற்றும் 25 காவலர்களுக்கு 2 நாட்கள் ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து கைப்பந்து, கிரிக்கெட், கபடி, இறகுபந்து, கோ-கோ போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பண்ருட்டி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் பண்ருட்டி உட்கோட்டம் தாலுகா போலீஸ் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து விளையாடினர். இந்த விளையாட்டு போட்டி காவலர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் போட்டிகள் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு வருடாந்திர படை திரட்டு நிறைவு நாளில் இறுதி விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.

Next Story