பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்த கோரிக்கை
வள்ளியூர் அருகே ஊருக்குள் புகுந்த சாக்கடை கழிவநீரை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் திடீரென சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே ஊருக்குள் புகுந்த சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் திடீரென சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
வள்ளியூர் யூனியன் ஆனைகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட துலுக்கர்பட்டியில் இருந்து மாவடி கிராமத்திற்கு இடையே பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் துலுக்கர்பட்டி கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஓடை மறிக்கப்பட்டதால் கழிவு நீர் தெருவில் புகுந்து உள்ளது. இதனால் சாலைகளிலும் வீடுகளிலும் சாக்கடை நீர் தேங்கி காணப்படுகிறது. துலுக்கர்பட்டி கிராமத்தில் தெருவில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சாலைமறியல்
இந்தநிலையில் இதனை கண்டித்து நேற்று காலையில் பொதுமக்கள் திடீரென்று துலுக்கர்பட்டி மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போராட்டம் நடத்தியவர்களுடன் வள்ளியூர் போலீசார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story