12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி


12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 17 March 2022 12:59 AM IST (Updated: 17 March 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மூலம் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமின் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்று முதல் அலை, 2-ம் அலை மற்றும் 3-ம் அலை என பல்வேறு காலகட்டங்களில் உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில் உலக சுகாதாரத்துறையின் அறிவுரையின்படி, 2-ம் அலையின்போது கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் என அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று தடுப்புக்கான கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 வகை தடுப்பூசிகள் உலக சுகாதார மருத்துவத்துறையின் அனுமதியோடு செலுத்தப்பட்டது. 
 
90,400 சிறுவர்கள்

அதனை தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. பின்னர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அதற்கடுத்து 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்ற வந்த நிலையில் தற்போது 12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் கொரோனா நோய் தொற்று தடுப்பிற்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 90,400 சிறுவர்கள் பயனடைய உள்ளனர். இந்த தடுப்பூசியின் 2-ம் தவணை 28 நாட்கள் கழித்து செலுத்தப்பட உள்ளது. எனவே தகுதியுள்ள அனைவரும் விடுபடாத அளவிற்கு அந்தந்த பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் வகையில் இருந்திடவும், அதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் அரசு அலுவலர்கள், நகரமன்ற கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story