வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது
விழுப்புரம் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த மோட்சகுளம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும்படியாக வந்துகொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் எஸ்.மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் அருள்ராஜ் (வயது 25), மாரிமுத்து மகன் அன்பரசன் (23) என்பதும், இவர்கள் இருவரும் 15.9.2021 அன்று எஸ்.மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன வேன் டிரைவரான செந்தில்குமரன் (43) என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை கொள்ளையடித்ததும், இவர்கள் இருவரும் பல இடங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
நகைகள் மீட்பு
இதையடுத்து அருள்ராஜ், அன்பரசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 6 பவுன் நகைகள், 100 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் கொள்ளையடித்த நகைகளில் சில நகைகளை விற்று வாங்கிய 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story