“இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது”- சபாநாயகர் அப்பாவு பேச்சு


“இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது”- சபாநாயகர் அப்பாவு பேச்சு
x
தினத்தந்தி 17 March 2022 1:10 AM IST (Updated: 17 March 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

“இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நெல்லை:
“இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

புத்தாக்க பயிற்சி
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான யூனியன் தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து எப்படி செயல்பட வேண்டும். அங்கன்வாடிக்கு தேவையான திட்டங்களை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த புத்தாக்க பயிற்சி நெல்லையில் நேற்று நடந்தது.
கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசூர்யா வரவேற்று பேசினார்.
சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அடித்தட்டு மக்களை தூக்கி நிறுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது. குழந்தைகள் படிப்பில் மட்டுமல்ல, உடல் வளர்ச்சியிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. இந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள உணவுகளை வழங்கி குழந்தைகளின் எடை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கன்வாடி மூலம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முதன்மை
இந்தியாவிலேயே தமிழகம் தான் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் கல்வியில் நமது மாவட்டம் முதல் 10 இடங்களில் உள்ளது. இதேபோல் குழந்தைகள் வளர்ச்சியிலும் நமது மாவட்டம் முதல் இடத்திற்கு வரவேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்து கட்டாயம் ரூ.15 லட்சம் ஊட்டச்சத்து மையம் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் நிதி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் 15-வது நிதிக்குழு நிதியில் இருந்து ஊட்டச்சத்து மையத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடிகளுக்கு தேவையான வசதிகளை நீங்கள் செய்து கொடுக்க வேண்டும். .

குழந்தைகள் பராமரிப்பு
பெண்களுக்குத்தான் குழந்தைகள் பராமரிப்பு பற்றி தெரியும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளார். எனவே நீங்கள் பொறுப்பில் இருக்கும்போது உங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி உள்ளிட்ட கட்டிடங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் தான் ஒரு குழந்தைக்கு தாய் போல் இருந்து குழந்தையை வளர்க்கிறார். அவருக்கு நாம் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி முகாமில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெதா சிற்றாள் நன்றி கூறினார்.

Next Story