சாப்டூர் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் வெட்டும் பணி


சாப்டூர் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் வெட்டும் பணி
x
தினத்தந்தி 17 March 2022 1:40 AM IST (Updated: 17 March 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

தீ பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக சாப்டூர் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் வெட்டும் பணி நடந்து வருகிறது.

பேரையூர்
தீ பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக சாப்டூர் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் வெட்டும் பணி நடந்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் சாப்டூர் வனப்பகுதி சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது புலிகள் சரணாலயமாக இந்த வனப்பகுதி மாற்றப்பட்டுள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, சாம்பல் நிற அணில்கள் மற்றும் அரிய வகை மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளது. 
இந்த வனப்பகுதியில் வருடந்தோறும் கோடை காலத்தில் ஆங்காங்கு தீப்பிடித்து விடுகிறது. எனவே தீ விபத்து நடக்காமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வனத்துறையினரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீத்தடுப்பு கோடு
வனப்பகுதியில் இயற்கையாக ஏற்படும் தீ விபத்தை தடுப்பதற்காக தீ தடுப்பு கோடுகள் சாப்டூர் வனப்பகுதியில் வெட்டப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் பரவும் காட்டுத்தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் இருப்பதற்காக தீத்தடுப்பு கோடுகள் முன்னெச்சரிக்கையாக அமைக்கப்படுகிறது. சாப்டூர் வனப்பகுதியில் உள்ள கோட்டை மலைப்பகுதியில் 5 கி.மீ. நீளத்துக்கும், பீட் எண் 10 பகுதியில் 3.5 கி.மீ. நீளத்திற்கும், அய்யன்கோவில் பகுதியில் 4 கி.மீ. தூரத்துக்கும் இந்த தீ தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோடுகள் 3 மீட்டர் அகலத்தில் அதிலுள்ள புற்கள், மற்றும் செடிகொடிகளை அகற்றுவதன் மூலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பணியில் சுமார் 60 ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி கூறியதாவது, வனப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் தீ பிடித்தால் அவை குறித்த தகவல்கள் சர்வே ஆப் இந்தியா அரசு நிறுவனம் மூலம் தகவல் பெறப்பட்டு வருகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விரைவாக தீ அணைக்கப்பட்டு வருகிறது. 
மேலும் அந்த தீ மற்றொரு இடங்களுக்கு பரவாமல் இருக்க இந்த தீ தடுப்பு கோடுகள் 12.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு வெட்டப்பட்டு வருகிறது என்றார்.

Next Story