அரிவாளுடன் பதுங்கி இருந்த ரவுடி கைது


அரிவாளுடன் பதுங்கி இருந்த ரவுடி கைது
x
தினத்தந்தி 17 March 2022 1:57 AM IST (Updated: 17 March 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அரிவாளுடன் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி:
தென்காசி பாறையடி 2-வது தெருவை சேர்ந்த தாதா பீர் என்பவர் மகன் சாகுல்ஹமீது (வயது 32). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயர் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இவரை தென்காசி போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தென்காசி பச்சை நாயக்கன் பொத்தை பகுதியை தன் வசமாக்கி உள்ளதாகவும், அங்கு யாரும் வரக்கூடாது என பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர்முகம்மது என்பவரை சாகுல்ஹமீது ஆயுதங்களால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக தென்காசி போலீசார், சாகுல்ஹமீதுவை தீவீரமாக தேடி வந்தனர்.
அப்போது சாகுல்ஹமீது பொத்தைகுளம் பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் இடத்திற்குள் ஓடி மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அப்பகுதிக்கு குளிக்க சென்ற பெண்களையும் மிரட்டி வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ண ராஜ், துணை சூப்பிரண்டு மணிமாறன் ஆகியோரின் அறிவுரைப்படி தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். பறக்கும் கேமரா (டிரோன்) உதவியுடன் அவரை தேடி பச்சநாயக்கன் பொத்தை அருகில் சென்றனர். அங்கு அரிவாளுடன் குளத்தின் நடுவே பதுங்கி இருந்த சாகுல்ஹமீதை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Next Story