ஆக்கிரமிப்பை அகற்றியபோது தீக்குளிக்க முயன்ற விவசாயி
உடையார்பாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றியபோது விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல். விவசாயியான இவர் தனது வயலுக்கு அருகே உள்ள வண்டிப்பாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதனால், இந்தப்பாதை வழியாக விவசாய இடு பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும் முடியாமல் அப்பகுதி விவசாயிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.
தீக்குளிக்க முயற்சி
இந்தநிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது விவசாயி ஜெயவேல், திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை தீக்குளிக்க முடியாமல் தடுத்ததுடன் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதனைத்தொடர்ந்து வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story