மின் உற்பத்திக்காக, பில்லூரில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


மின் உற்பத்திக்காக, பில்லூரில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 March 2022 2:25 AM IST (Updated: 17 March 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

மின் உற்பத்திக்காக பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பவானிசாகர்
மின் உற்பத்திக்காக பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. 
நீர்வரத்து அதிகரிப்பு
நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,052 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.57 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 380 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
இந்த நிலையில் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 972 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.34 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 700 கன அடியும்,  கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 380 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.  

Next Story