விளைச்சல் அதிகமானதால் விலை குறைந்த மஞ்சள்
தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளைச்சல் அதிகரித்த நிலையில் மஞ்சள் விலை குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேவூர்:-
தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளைச்சல் அதிகரித்த நிலையில் மஞ்சள் விலை குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மஞ்சள் சாகுபடி
தேவூர் சுற்றுவட்டாரத்தில் சென்றாயனூர், பாலிருச்சம்பாளையம், அம்மாபாளையம், காணியாளம்பட்டி, பெரமாச்சிபாளையம், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், மேட்டுப்பாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, செட்டிப்பட்டி, ஒடசக்கரை, பொன்னாம்பாளையம், கொட்டாயூர், பூமணியூர், ேகாம்புக்காடு, கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட இந்த மஞ்சள் பயிர் தற்போது விளைச்சல் அடைந்து உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மகசூல் அதிகரித்து உள்ளது. இதையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் மஞ்சள் வெட்டி எடுக்கும் அறுவடை பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
விலை குறைந்தது
அறுவடை செய்யப்படும் மஞ்சளை ஒரு இடத்தில் குவித்து வைத்து பின்னர் அவற்றை வேக வைக்கின்றனர். அதன்பிறகு அந்த மஞ்சளை வெயிலில் நன்கு காயவைத்து எந்திரம் மூலம் சுத்தம் செய்கின்றனர். பின்னர் தூய்மையான மஞ்சளை 100 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டி ஈரோடு, பெருந்துறை, கோபி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.
இதன்காரணமாக மார்க்கெட்டுக்கு மஞ்சள் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் (100 கிலோ) விரலி மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 599 முதல் ரூ.8 ஆயிரத்து 800 வரை விற்பனையானது. அதே போல் குண்டு மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 311 முதல் ரூ.7 ஆயிரத்து 474 வரை விற்பனையானது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் தற்போது வரத்து அதிகம் காரணமாக மஞ்சள் விலை சுமார் ரூ.2 ஆயிரம் வரை குறைந்து விட்டதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். மேலும் கடந்த சில நாட்களாக மஞ்சள் விலை படிப்படியாக குறைந்து வருவது விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது.
Related Tags :
Next Story