தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 March 2022 2:31 AM IST (Updated: 17 March 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி ரவுண்டானா பெங்களூரு ரோடு, சென்னை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ள. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். அந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி நடந்து முடிந்தது. வேகத்தடைகளில் வர்ணம் பூச நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் நன்றி தெரிவித்தனர்.
-முத்துக்குமரன் கிருஷ்ணகிரி
சாலை சீரமைக்கப்படுமா?
தர்மபுரி- சேலம் நெடுஞ்சாலையில் தடங்கம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் தார்சாலை பிரிகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் வழியாக டவுன் பஸ் போக்குவரத்தும் உள்ளது. இப்படி போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன், தர்மபுரி.
மயானத்திலும் ஆக்கிரமிப்பு?
தர்மபுரி நகரில் அரசு மருத்துவக் கல்லூரி எதிரில், பச்சியம்மன் கோவில் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த மயானம் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதில் ஏராளமானோர் தங்களது உறவினர்களுக்கு நினைவாலயம் என்ற பெயரில் பெரிய, பெரிய கட்டிடங்களை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நகராட்சியில் எந்தவித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களால் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாக்கள் நடத்த கூட இடம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எந்தவித பராமரிப்பும் இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி, நகராட்சி மின்மயானத்தில் உள்ள விதிமுறைகள் போன்று உடல்களை புதைக்க மட்டும் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
-குருமூர்த்தி, நெடுமாறன் நகர், தர்மபுரி.
பூசப்படாமல் உள்ள அரசு பள்ளி கட்டிடம் 
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எம்.செட்டிஅள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த போதிலும் இதுநாள் வரை பள்ளி சுவர் பூசப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஒழுகி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சுவர் பூசாமல் உள்ளதால் விரைவில் கட்டிடம் பழுதடையும் சூழ்நிலை உள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் நலன்கருதி அரசு பள்ளியில் பூசாமல் உள்ள சுவர்களை பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, எம்.செட்டிஅள்ளி, தர்மபுரி.
 பள்ளம் மூடப்படுமா?
சேலம்- கோவை செல்லும் தேசிய  நெடுஞ்சாலை அரியானூர் பஸ் நிறுத்தம்  அருகில் அடுத்தடுத்து தனியார் கேபிள் வயர் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு தற்போது வரை பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ராஜேஷ்குமார், வீரபாண்டி, சேலம்.
மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி நகரின் பெங்களூரு சாலை, சேலம் சாலை, பழையவீட்டு வசதி வாரியம், செல்லாண்டி நகர், காந்திநகர், புதிய வீட்டு வசதி வாரியம், கோ ஆபரேடிவ் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் திடீர் மின்தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்வெட்டை தடுக்க வேண்டும்.
-மணிமாறன், கிருஷ்ணகிரி

Next Story