பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேச்சு
நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.
ஆய்வு கூட்டம்
குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டிடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை, மீன்வளத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாதாள சாக்கடை
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசுகையில் கூறியதாவது:- பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி, பழுதடைந்த சாலைகளை செப்பனிடும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்பு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிடும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இடர்பாடுகள்
வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பெருக்கினால் ஏற்பட்ட கால்வாய் உடைப்புகள், பழுதடைந்த நீர்நிலைகள் மற்றும் சாலைகளை பழுது நீக்கி சீரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பணிகள் மேற்கொள்ளும்போது ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சத்தியஜோஸ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
---
Related Tags :
Next Story