கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சரிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை தடுப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சென்னிமலை
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை தடுப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனு
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று சென்னிமலைக்கு வந்தார்.
அப்போது அவரை கி.வே.பொன்னையன் (தற்சார்பு விவசாயிகள் சங்கம்), கே.ஆர்.தங்கராஜ் (கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு), கே.சி.ரத்தினசாமி, பொன்.பெரியசாமி (தமிழக விவசாயிகள் சங்கம்) மற்றும் நிர்வாகிகள் முத்துக்குமார், சுப்பிரமணி, அர்ச்சுனன் ஆகியோர் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர்
கீழ்பவானி அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இதுவரை கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் எந்தவித சீரமைப்பு பணிகளும் முழுமையாக செய்யப்படவில்லை. கீழ்பவானி ஆயக்கட்டு நிலத்தின் பரப்பளவு 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் ஆகும். முதல் சுழற்சியில் 1.35 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. 1.35 லட்சம் ஏக்கருக்கு நன்செய் பயிர் செய்யும் காலத்தில் ஒரு கன அடி தண்ணீரை கொண்டு 60 ஏக்கர் பாசனம் செய்ய வேண்டும். இந்த பாசன அளவீட்டின் படி கீழ்பவானி கால்வாய் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் விடுகிற பொழுது வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் தான் விட வேண்டும். ஆனால் கசிவு நீரை கணக்கிட்டு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் கால்வாயில் விடப்பட்டு வருகிறது. ஆயக்கட்டு வழியாக வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீரும், கசிவு நீர் மூலம் வினாடிக்கு 600 கன அடி தண்ணீரையும் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பெற்று வருகிறோம். இந்த அளவு தண்ணீரை அரசும், பொதுப்பணித்துறையும் அனுமதித்து வருகிறார்கள்.
சீரமைக்கும் பணியை தொடங்கினால்...
ஆனால் கால்வாயின் கட்டமைப்புகள் பெரிதளவில் சிதைந்து விட்டதால் தற்போதைய நீர் இழப்பு 900 கன அடியாக இருக்கிறது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 300 கன அடி தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் இந்த இழப்பு பல இடங்களில் இதைவிட அதிகமாகவும் உள்ளது. இதனால் கீழ்பவானி பாசனத்தில் ஆயக்கட்டு பாசனதாரர்களின் உரிமை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த கசிவு நீரை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் தான் பாசன கால்வாயை அரசு செய்யும் சீரமைப்பு பணியை செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.
இந்த கால்வாயில் சீரமைக்கும் பணியை தொடங்கினால் தான் பழைய பாலங்கள், மதகுகள், கால்வாய் கரைகள் ஆகியவை புதுப்பிக்கப்படும். சீரமைப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் தான் வாய்க்கால் பகுதிக்குள் உள்ள மரங்களை அழிப்பதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
நடவடிக்கை
பாசன விவசாயிகளின் உரிமை மற்றும் கால்வாய் கட்டமைப்புகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நபார்டு வங்கியிடம் 933 கோடியே 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று சீரமைப்பு பணிகளை செய்து வருகிறார்கள். கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை செய்யாவிட்டால் பாசன அமைப்பு சிதைந்து 3 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமின்றி பொருளாதார சூழ்நிலையும் பாதிக்கும். அதனால் அரசின் இந்த திட்டத்தை தடுப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இதுகுறித்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.பிரபு, நகர செயலாளர் எஸ்.எம்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வு
இந்த நிலையில் சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட பெருமாள்மலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கே.ஜி.வலசு, உப்பிலிபாளையம், வடுகபாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்கின்றனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு நேற்று தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் விற்பனை செய்யும் நெல்லுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
ஆய்வின் போது சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் சி.பிரபு, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சி.கே.ஆறுமுகம், ஒன்றிய இளைஞரணி நிர்வாகி சதீஷ் என்கிற பி.சுப்பிரமணியம், பசுவபட்டி பெரியசாமி, ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story