ரேஷன் கடைக்குள் புகுந்த பாம்பு
வேடசந்தூரில் ரேஷன் கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் நேருஜிநகரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு இன்று காலை விற்பனையாளர் பாண்டியம்மாள், உதவியாளர் சுருளி ஆகியோர் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அருகே இருந்த முட்புதரில் இருந்து வந்த சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு வரிசையில் நின்று இருந்த பொதுமக்களை கடந்து ரேஷன் கடைக்குள் மின்னல் வேகத்தில் சென்று பதுங்கி கொண்டது.
இதை பார்த்த பொதுமக்கள் அய்யோ... பாம்பு... என்று அங்கிருந்து அலறியடித்து கொண்டு கடையை விட்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் ரேஷன் கடை ஊழியர்களும் கடையை விட்டு வெளியே ஓடினார்கள்.
இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ரேஷன் கடைக்கு விரைந்து வந்து அங்கிருந்த சாக்குகள், அரிசி, சீனி, பருப்பு மூட்டைகளை வெளியே தூக்கி வைத்து சுமார் 2 மணி நேரம் தேடி பார்த்தனர். ஆனால் பாம்பு கிடைக்கவில்லை. அது எங்கோ தப்பித்து சென்று விட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story