முட்டை விலை சரிவால் 2 மாதங்களில் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி நஷ்டம் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் தகவல்
முட்டை கொள்முதல் விலை சரிவால் கடந்த 2 மாதங்களில் மட்டும் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறினார்.
நாமக்கல்:
முட்டை கொள்முதல் விலை சரிவால் கடந்த 2 மாதங்களில் மட்டும் கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறினார்.
ரூ.300 கோடி நஷ்டம்
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி ஆகியவை இணைந்து பொதுக்குழு கூட்டம் மற்றும் பண்ணையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தை நாமக்கல்லில் நடத்தின. கூட்டத்துக்கு சம்மேளன தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தற்போது கோழிப்பண்ணை தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவ வேண்டும். இந்திய அளவில் நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் முன்னோடியில் இருந்து வருகிறது. இங்கு தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு முட்டைக்கு ரூ.1 வீதம் தினசரி ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 மாத காலத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
மூலப்பொருட்கள் 40 சதவீதம் உயர்வு
எனவே மத்திய, மாநில அரசுகள் வங்கிகள் மூலம் 30 சதவீதம் கடன் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் பண்ணையாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகும். தமிழக அரசே அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்தால் எங்கள் சூழ்நிலை நன்கு தெரியும்.
மக்காச்சோளம், கோதுமை, கம்பு உள்ளிட்டவை கோழிப்பண்ணைகளுக்கு தான் அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இந்த தொழில் பாதிக்கப்பட்டால், இதன் தொடர்ச்சியாக விவசாயமும் பாதிக்கப்படும். நாங்கள் முட்டை விற்பனை செய்யும் உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் பண்ணைகள் வந்து விட்டன. இதேபோல் மூலப் பொருட்களின் விலையும் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. இதுவே நஷ்டத்துக்கு முக்கிய காரணம் ஆகும்.
சோயா இறக்குமதி
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள 1.35 லட்சம் டன் மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக சொல்கிறார்கள். இது சற்று ஆறுதலாக உள்ளது. விவசாயிகளிடம் மக்காச்சோளம் இருப்பு இல்லை. 90 சதவீத மக்காச்சோளம் வியாபாரிகளிடம் தான் உள்ளது. அவர்கள் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்துகிறார்கள். எனவே தமிழக அரசு மக்காச்சோளம் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோழி மருந்துகளில் கலப்படத்தை கண்டறிய நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் நவீன ஆய்வகம் ஏற்படுத்தி தர வேண்டும். நாங்கள் 25 ஆயிரம் டன் சோயாவை கப்பல் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு 11 லட்சம் டன் சோயா இறக்குமதிக்கு அனுமதி அளித்தது. அதில் 6 லட்சம் டன் மட்டுமே வந்து உள்ளது. மீதமுள்ள 5 லட்சம் டன் சோயாவை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி செயலாளர் முரளி, உதவி தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் காளியண்ணன், நிர்வாககுழு உறுப்பினர்கள் ரெங்கநாதன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story