ஆற்காடு அருகே அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆற்காடு அருகே  அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2022 7:22 PM IST (Updated: 17 March 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆற்காடு

அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வாலிபர் தேசிய நெடுஞ்சாலையோரம் கல்லில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கியாஸ் குடோன் அருகே 6 அடி உயரமுள்ள கருங்கல்லில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அப்பகுதி மக்கள் ஆற்காடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை செய்து கொண்டவர் வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த சுலைமான் (வயது 19) என்பதும் டைல்ஸ் கற்கள் ஒட்டும் நபரிடம் கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

கருத்து வேறுபாடு

இவருடைய அண்ணன் இம்ரான், ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் பீடா கடை நடத்தி வந்துள்ளார். சுலைமான், தனது அண்ணன் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார். அண்ணன்-தம்பிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனமுடைந்த சுலைமான் நேற்று முன்தினம் இரவு தனது துணிகளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். நேற்று காலை சுலைமானின் அண்ணன் இம்ரான் வேலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு போன் செய்து தம்பி சுலைமான் அங்கு வந்தானா? என விசாரித்துள்ளார். 

அதன் பிறகு தான் சுலைமான் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இம்ரான் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, சுலைமான் என்பதை உறுதி செய்தார். 

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------

Next Story